முன்னுதாரணம் !!!
வியாசருக்கு
மஹாபாரதம் எழுதிய
உலகின் முதல் ஸ்டெனோகிராஃபர் !
அவல், பொறி
பழங்கள் உண்ட
பிரபஞ்சத்தின் முன்னோடி டயட்டீஷியன் !
தந்தைக்கும்
தம்பிக்கும் இரு தாரம்
இடையில் இவரோ பிரம்மச்சாரி !
ஸ்மார்ட் வொர்க்கால்
ஹார்ட் வொர்க்கை வென்று
ஞானப்பழம் பெற்ற ஐ.டி.ப்ரெஸிடென்ட் !
மிருகமும்
மனிதனும் கலந்து தோன்றிய
அற்புதமான முழுமுதற் கடவுள் !
சாய் சரணம்
உன் திருவடியில் என் சிரம் வைத்தேன் ஓம் ஜெய் சாயி !
இன்பமதைப் பெருக்கிடுவாய் துன்பமதைக் கரைத்திடுவாய் !
பஜனை பாடி அகமகிழ்ந்தேன் அடிமையான அடியேன்
ஒளிமழையைப் பொழிந்திடுவாய் இருளதனை நீக்கிடுவாய் !
நித்தமுன் மகிமைகளைச் சுவைக்கிறதே என் செவிகள்
அன்புடனே ஆதரிப்பாய் வலியதனை விலக்கிடுவாய் !
கணம் யாவும் உன் நாமம் உச்சரிக்கும் எந்தன் நா
மனமுவந்து நிறைவளிப்பாய் குறையதனைக் களைந்திடுவாய் !
படைக்கும் நான்முகனை உன் முகத்தில் நான் கண்டேன்
கருணையுடன் காத்திடுவாய் சோர்வதனை விரட்டிடுவாய் !
காக்கும் கண்ணனாக தியானித்து உனை உணர்ந்தேன்
விளையாட வந்திடுவாய் வினையாவும் கரைத்திடுவாய் !
சிவம் நீ என்றறிந்து தலைவனாக உனை ஏற்றேன்
உளம் கனிந்து ஊக்குவிப்பாய் ஊறதனை அகற்றிடுவாய் !
சக்தி நீ எனவுணர்ந்து அருச்சிக்கும் என் கரங்கள்
மலர்க்கரத்தால் அருள் சுரப்பாய் பயமதனைப் போக்கிடுவாய் !
நம்பினோர்க் கெடுவதில்லை அது நான்குமறைத் தீர்ப்பு
சாயி உனைச் சரணடைந்தேன் பரவசத்தில் ஆழ்த்திடுவாய் !

மாலைக் கதிரவன்
வான மங்கைக்கு
கையசைத்து விடை பெறும் நேரம்
சிங்காரச் சோலையில்
இயற்கையின் நீரில்
செயற்கையாய் ஓர் ஊற்று
பொன்னொளி பூசிய பூமகள்
இயற்கையின் இதயமும்
மனிதனின் மூளையும்
மாநிலம் முழுதும் மகத்துவம் !
அண்ணாந்து பார்த்தேன்
அகத்தைக் குளிர்விக்கும் பிறைமதி
மதிசூடன் நினைவில் வந்தான்
நேயனே நேரில் வா
சேயின் அழைப்பை
உடன் தாயுமானவன்
ஆகாயத்தில் தில்லைக் கூத்தன்
பிரமித்தேன் பேரொளியில்
பித்தா! பேயா ! நீயா !
ஆம் நீயே பெருங்கடவுள்
உரிமையுடன் கேட்டேன் உமாபதியை
எனக்கொரு வரம் தருவாயா?
இரு கண் அசைத்தான் முக்கண்ணன்
உன் பிரதிநிதியாய் எனக்கொரு
வயதான வழித்துணை தேவை
தந்தேன் என்று பேயன் மாயமானான்!
என் நிழலில் ஒரு நிஜம்
கண்ணுக்குத் தெரியவில்லை
உள்ளுக்குள் உணர்ந்தேன்
எப்படிச் சொல்வேன்
மகேசனின் மகிமையை?
தயாளனின் திருவருளை
மலரை நினைத்தால்
நாசியில் நறுமணம்
கனியை நினைத்தால்
நாவினில் அருஞ்சுவை
குயிலை நினைத்தால்
மனதில் மதுர கீதம்
தென்றலை நினைத்தால்
தேகத்தில் உயிர்ச் சிலிர்ப்பு
இமைகளை மூடினேன்
இனியதாய் ஓர் அருள் உரு!
உடல் நோகிறதென்றேன்
காய் கனி உண்
காலாற நட என்றான்
பெரிய மருத்துவனோ நீ?
கேலியாய்க் கேட்டேன்
மௌனமாய் முறுவலித்தான்
மனது வலிக்கிறதென்றேன்
ஆசையைத் துற
அனைத்தின் மீதும்
அன்பு செலுத்தென்றான்
சேர்ந்து நடந்தோம் சாலையில்
பார்வையைப் பறிக்கும் பூக்கள்
ப்றிக்கத் தூண்டும் கனிகள்
நமட்டுச் சிரிப்புடன் வினவினேன்
பூ இனிதா? கனி இனிதா?
மண்ணுக்குள் மணம் பரப்பும்
வேரும் விதையும் என்றான்
நகைக் கடை விளம்பரமாய்
நடந்து வந்தாள் நவீன நங்கை
ஆவலுடன் கேட்டேன்
பெண்ணின் பேரழகு
புன்னகயா? பொன்னகையா?
தீர்க்கமாய் விடையுறுத்தான்
தன்னலமற்ற தாய்மையே!
துயரைச் சுமந்தபடி
கண்ணில் தென்பட்டான்
இக்கால இளைஞன்
மனிதன் வெற்றிபெற
அதிகம் தேவை
கல்வியா, பணமா?
விவகாரமாய்க் கேட்டேன்
இனிதே இயம்பினான்
இரண்டையும் பெற உதவும்
நம்பிக்கையுடன் பொறுமை!
பிறரை மகிழ்விக்கும்
பொய் பெரிதா?
மனதைப் புண்படுத்தும்
மெய் பெரிதா?
மெலிதாகச் சிரித்தான்
மாட்டிக் கொண்டீரா என்றேன்
மௌனமான புன்சிரிப்பே
மிக, மிகப் பெரிதென்றான்.
இந்த யந்திர யுகத்தில்
இனிய பூவுலகில்
பொன் பெருஞ்செல்வமா?
மண் அருன்ஞ்செல்வமா?
ஆராய்ந்து சொல் என்றேன்
பளிச்சென பகர்ந்தான்
எந்தக் காலத்திலும்
ஏழுலகிலும்
இணையற்ற உயர் செல்வம்
இறைவனின் திருவடிகளே!
அமதியான அகல் விளக்காய்
ஆர்ப்பரிக்காத அலை கடலாய்
இனிக்கின்ற தத்துவமாய்
ஈசனின் தூதுவனாய்
உற்ற வழித்துணையாய்
ஊறகற்றும் மருத்துவனாய்
என்னருகில் என் நிழலாய்
ஏற்றமிகு ஏகனாய்
ஐம்புலனடக்கிய மெய்ஞானமாய்
ஒளியூட்டும் சத்குருவாய்
ஓடி வந்த உயிர் நட்பாய்
ஔவியம் கொள்ளா அருள் மழையாய்
என்னுடன் உள்ள நீ யார்?
உன் ஊரென்ன? பேரென்ன?
யதார்த்தமாய்க் கேட்டேன்
பணிவுடன் பகர்ந்தான்
நான் ஒரு பக்கிரி !
தங்கிய ஊர் சீரடி !
ஊரார் எனை ”சாய்” என்பர்.
........................................................................
நேரத்துடன் நேர்காணல்
ஞாயிறு நிலவில்
சலிப்புடன் நானோ
மாடியில் உலவி
வானம் பார்த்தேன்
பளபளக்கும் நட்சத்திரக்
குழந்தைகள் பலவற்றைப்
பறிகொடுத்த போதும்
பரந்த வானில்
பரவசம் மட்டும் !
வியத்தகு விண்ணில்
வட்ட வடிவில்
விட்டத்தைத் தொலைத்தாலும்
தேய்பிறை முகத்தில்
தெளிவான ஒளிக்கீற்று !
கருப்பையில் கறுப்பைச் சுமந்து
தண்ணீர்ப் பூக்களை உதிர்க்காமல்
சிதறிப் போனாலும்
முகிலின் முகத்தில்
முத்தாய்ப்பாய்ப் புன்னகை !
தேடுவது தொடர்ந்தாலும்
தேமதுரத் தமிழைப் போல்
உணர்வை ஸ்பரிசிக்கும்
உற்சாகத் தென்றலில் உல்லாசம் !
காலையில் ஜனனம்
மாலையில் மரணம் எனினும்
மலர்களின் முகங்களில்
மனங்களைக் கொள்ளையடிக்கும்
மழலையின் சிரிப்பு !
ஆற்றலை அழித்தாலும்
அழிவினை ஆக்கினாலும்
அலை கடல் அனைதிலும்
ஓயாத ஆர்ப்பரிப்பு
தீராத விளையாட்டு!
இறைவனின் படைப்பில்
இரவோ, பகலோ
வெயிலோ, மழையோ
சருகோ, மலரோ
பனித்துளியோ, எரிமலையோ
இயற்கையின் அழகே
இயல்பாய் இருப்பதுதானோ !
பரமன் படைப்பில்
மனிதனில் மட்டும்
மனதை வைத்ததேன்?
அகத்தில் அடிக்கடி ஆறாத் துயரேன்?
கரு விழி மலர்களில்
கடல் நீர் எப்படி?
வினாக்கள் மூன்றுக்கும்
விடை ஒன்றுதான் – ’நேரம் ’
சஞ்சலம் நிறைந்த
நெஞ்சம் சொன்னது
நேரமே நீ மட்டும்
என் கையில் கிடைத்தால்...
சட்டென்று யாரோ
தோளைத் தொட்ட சிலிர்ப்பு
சுற்றிப் பார்த்தால் ஒருவரும் இல்லை
யார்? – உச்சரிக்க முயன்றேன் முடியவில்லை
‘நான்தான் நேரம்
நினைத்தாய் வந்து விட்டேன்’
இமைகள் மூடின
இதழ்கள் உலர்ந்தன
இதயம் சிலிர்த்தது
நேரம் கேட்டது
நான் மட்டும் உன் கையில் கிடைத்தால்...
கேட்டாயல்லவா?
ஆம், தன்னிச்சையாய் தலையசைத்தேன்
நீ மண்ணிற்கு வந்தது முதல்
விண்ணிற்கு பறக்கும் வரை
உன்னுடன் இருப்பது நான் மட்டும்தானே?
நீ என்னை பயன் படுத்துகிறாயா?
நேரத்தின் வினாவில் விடை இருந்தது
உண்மை உரைத்தது
உண்மை உறைத்தது!
ஓரிரு நொடிகளில் உள்ளம் பூத்தது
அகத்தில் அழகாய்ப் பன்னீர் மழை
நேரத்தை நெருங்கி
நேயத்துடன் கை குலுக்கினேன்
எங்கள் மௌனத்தின் மொழி
குரல் உயர்த்தி அதிகாரம் செய்யவில்லை
குறளின் அதிகாரம் உணர்த்தியது !
...................................................................................................................
வேண்டுவன !
புன்னகை பூக்கும் முகமே வேண்டும்
பூக்களை நுகரா நாசியும் வேண்டும்
பனித்துளி பருகிடும் விழிகள் வேண்டும்
பாக்களைச் சுவைக்கும் செவிகள் வேண்டும்
தொடாமல் சிலிர்த்திடும் சருமம் வேண்டும்
நாமென் றுரைக்கும் நாவே வேண்டும்
நாணயம் காக்கும் நாநயம் வேண்டும்
புலன்களை அடக்கும் புத்தியும் வேண்டும்
செஞ்சுவை சொற்களில் சக்தியும் வேண்டும்
சீர்மிகு செயல்களில் சித்தியும் வேண்டும்
அன்பே அமிழ்தாய் சுரந்திட வேண்டும்
அறிவே அழகாய் அலர்ந்திட வேண்டும்
அழகே அறிவால் மிளிர்ந்திட வேண்டும்
அலை போல் ஆற்றல் தொடர்ந்திட வேண்டும்
அனைவரும் ஒன்றென உணர்ந்திட வேண்டும்
மலர்களைக் கொய்யா குணமே வேண்டும்
விண்ணை ரசிக்கும் மனமே வேண்டும்
வண்ணத்துப் பூச்சியின் விரதம் வேண்டும்
கானம் கேட்கும் மோனம் வேண்டும்
கடவுள் வசிக்கும் கானகம் வேண்டும்
இயற்கையில் இறையுணர் இதயம் வேண்டும்
நோயே நோயில் மாண்டிட வேண்டும்
பொய்யே பொய்யாய்ப் போய்விட வேண்டும்
தர்மம் தழைக்கும் தரணியே வேண்டும்
தாகம் தணிக்கும் சுனைநீர் வேண்டும்
தணியாத தாகம் கற்பதில் வேண்டும்
நுண்ணறி வூட்டும் நூலகம் வேண்டும்
நூலறி வேற்கும் நுண்புலம் வேண்டும்
நேசம் பரப்பும் மனிதம் வேண்டும்
போட்டி யில்லா புவனம் வேண்டும்
ஓமென் றொலித்திடும் உலகம் வேண்டும் !
.....................................................................................
அருவி
பச்சை மலையரசிக்காக
கருப்பு முகிலரசன்
அன்பால் நெய்த
வெள்ளை நீராடை.
..................................................................................
காகமே
எஙகள் தாய்க் குலஙகள்
அன்போடு அமுதை ஊட்டுகையில்
உன்னைக் காட்டி ஊட்டுவார்கள்
பகிர்ந்து உண்பதை
பார்த்து கற்றுக் கொள்ள
மந்த புத்தியால்
கற்கவில்லை நாஙகள்
உங்கள் தாய்க்குலஙள்
உங்களுக்கு ஊட்டுகையில்
எங்களைக் காட்டி ஊட்டினார்களா?
தனியாக உண்டு மகிழ
கற்பூர புத்தியால்
நீங்கள் அதை கற்றுக்கொண்டீர்களா?
........................................................................
மழை
தென்னை இளங்குருத்தில்
திகட்டாத தேன் துளி !
புல்வெளிப் பூண்டுகளில்
மொட்டு விட்ட அரும்பு !
சுழற்சியில் தோன்றிடும்
தூய்மையான நீர்ச்சங்கிலி !
குளம், குட்டை, ஏரிகளில்
தீபாவளிச் சக்கரம் !
கடலலைகளில் ‘தான்’ துறந்த
இறை சங்கமம் !
கண்ணாடிச் சுவர்களில்
ஸ்படிக மொட்டுக்கள் !
தேவையளவு தூவினால்
தண்ணீர்ப் பூக்கள் !
தேவைக்கு மேல் உதிர்ந்தால்
அமிலச் சருகுகள் !
தண்ணீர்த் தவளைகளின்
இரவுச் சங்கீதம் !
நீல மயில்களுக்கோ
தோகைவிரி கொண்டாட்டம் !
எமனின் வாகனத்திற்கோ
எள்ளளவும் எதுவுமில்லை !
குழந்தைகளின் விளையாட்டில்
கப்பல் துறைமுகம் !
ஏழைக் கூலிகளுக்கோ
இடைக்கால பணித்தடை !
கவிஞனின் இதயத்தை
கருவறையாக்கும் வேதவிந்து !
செய்தித் துறையினரின்
பிரத்யேக தலைப்புச்செய்தி !
பங்களாவாசிகளின்
கட்டாய ஓய்வு !
நடைமேடைவாசிகளுக்கு
குற்றால ஐந்தருவி !
வீதிகளை நதிகளாய்
உருமாற்றும் மாயம் !
ஊர்திகளை ஓடங்களாய்
மிதக்க வைக்கும் மந்திரம் !
மிதமான வருகையினால்
வேளாண்மையின் வரம் !
மிதமிஞ்சிப் போனாலோ
விவசாயத்தின் சாபம் !
நல்லார் ஒருவர் உளரேல்
எல்லோர்க்கும் மாலன் !
தீயோர் பற்பலர் உளரேல்
அனைவர்க்கும் காலன் !
........................................................................
சமீபத்திய படைப்புகளில் சிறந்து தலை நிமிர்ந்து நிற்கும் படைப்பு. "Modern Art" போன்ற நவீன கவிதை...
ReplyDeleteதமிழும் கவிதையும் தொடர்ந்து நேசியுங்கள், இன்னும் பல படைப்புக்களை பரிசளியுங்கள்
My pick in this poem:
குளம், குட்டை, ஏரிகளில்
தீபாவளிச் சக்கரம் !
கண்ணாடிச் சுவர்களில்
ஸ்படிக மொட்டுக்கள் !
நல்லார் ஒருவர் உளரேல்
எல்லோர்க்கும் மாலன் !
தீயோர் பற்பலர் உளரேல்
அனைவர்க்கும் காலன் !
Thanks a lot VP
ReplyDeleteஇக்காலத்தில் ஒரு முற்போக்கு கவிஞர். என்னுடைய அக்கா என்று நினைக்கும்போது கூடுதல் மகிழ்ச்சி. தங்களது கருத்துக்கள் எல்லாரையும் சேர முயற்சி செய்ய வேண்டுகிறேன்.
ReplyDeleteகலக்கல்ஸ் ஆஹ்ப் சென்னை!
ஞானமாய் பிறந்தாய்
ReplyDeleteஞானமாய் வளர்ந்தாய்
ஞானத்தை மணந்தாய்
ஞானத்தை ஈன்றாய்
சான்றோரை மதித்தாய்
ஈன்றோரை சேவித்தாய்
எல்லாம் சிவமயம் என்றாய்
சிவனே சாய் என்றாய்
சாய் வழி நின்றாய்
அவர் வாய்மொழி நடந்தாய்
ஞான ஒளியாய் திகழ்ந்தாய்
ஞானத்தை என்னுள் விதைத்தாய்
ஞானவதியாய் என் தோழியாய்
ஞான மழையில் என்னை நனைத் தாய்
அதிலிருந்து சிறு துளி - உனக்கான விருந்தாய்
- சத்யஸ்ரீ
mama i have visited your blog but of no use mam. i couln't read tamil......!!!!!!!but my dad can read it .i showed him.he read it n said these r awsome .
ReplyDeleteI FEEL AS A CROW WHEN FLY ON THE SKY
ReplyDeleteTHEN I FEEL COOL CLOUDS AND WET ON A GROUND OF GROSS. MY THIRST COMPLETE BY UR KAVITHAI
SO MUCH LIKE FULL
GROW UR CREATIVE S CONGRRATS
really a nice experience mam............ i read your poems already in bus. but even it is a new experience for me to read it again. thaks for your friendship.
ReplyDeletesusi, Chidambaram
ReplyDeleteur blog is an en-block of empathy.